Tuesday, August 31, 2010

"இரண்டு கால் மிருகங்கள்."

அதெப்படி முடிகிறதென்று தெரியவில்லை?பெற்ற பிள்ளையை,அதுவும் வயசுக்கு வந்த சிறுமியை,அவளது நடத்தையை காரணம் காட்டி,தன் கூட்டாளிகளோடு சேர்ந்து,வீட்டில் மனைவி இல்லாத நேரம் பார்த்து,விஷ ஊசியை காலில் போட்டு கொன்றதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை,கௌரவ க்கொலையா என்பது கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது,ஆனாலும் பாருங்கள் ....மதுரைக்கு ஒன்றும் இந்தமாதிரி கௌரவ கொலைகள் ஒன்றும் புதிதல்ல....மதுரையை ச்சுற்றி உள்ள கிராமங்களில் அடிக்கடி நடப்பதுதான்.ஆனால் வெளி உலகிற்கு இது தற்கொலை என்று சொல்லப்பட்டு .கிராமத்து மயானத்தில் உடனே உடல் எரிக்கப்பட்டுவிடும்.....பெரும்பாலும் காதலும் ,சாதியும் தான் இந்த கௌரவக்கொலைக்கு காரணங்கள்.ஒரு பத்தாண்டுகளுக்கு முன் மதுரையை உலுக்கிய "கௌரவக்கொலை "இன்னும் மனசை உலுக்குக்கிறது.....

மதுரையை ஒட்டி உள்ள "செக்கானூரணி "என்ற ஊரில் இருக்கும் ஆங்கில மீடியம் பள்ளியில் பணிபுரிந்த விளையாட்டு ஆசிரியர் ஒருவர்,தன் மனசை தன்னோடு பழகிய பெண்ணிடம் பறிகொடுக்க,அது நாளடைவில் காதலாய் கசிந்துருகி,,,வீட்டுக்குத்தெரிய வர,பிரச்சினை தொடங்கியது,இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் தான்,அந்த பையன் மிக ஏழ்மையான குடும்பம்,பொண்ணோ அதிக வசதி......பிரித்துப்பார்த்தும் முடியவில்லை,காவலுக்கு ஆள் வைத்தும்,காதலர்கள் தப்பி ப்போய்...யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு,வெளியூரில் செட்டிலாகி விட்டனர்,பல மாதங்கள் கழித்து,பெற்ற மகள் மாசமாக [கருவுற்று] இருக்கிறாள் என செய்தியைககேள்வி ப்பட்டவுடன் ஊர் பெரியவர்களுடன் சேந்து போய்,பார்த்து பேசி,சமாதானம் ஆகி,பின் சில மாதங்களில் வந்த வளைக்காப்பு முடித்து,தாய் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வருகிற வழியில் .....காரில் வைத்து கூட்டி வருகின்றனர், வயல் வெளிகளை த்தாண்டி,தென்னந்தோப்புகளைத்தாண்டி....ஒதுக்கு புறமாக உள்ள "மோட்டார் ரூம்" அருகில் வந்தவுடன்,அம்மாகாரி காரை விட்டு கீழே இறங்கி,மோட்டார் ரூமிற்கு போய் சேலைய மாத்தி வருகிறேன் என்று சொல்லி நடக்க ஆரம்பிக்க,தந்தையோ..மகளிடம் "ஆத்தா. அம்மா தனிய போகுதுல்ல,கூட துணைக்கு போ தாயி.."என்று சொல்லி அனுப்பி வைத்து,மகள் உள்ளே நுழைந்தவுடன்,தாய்,தந்தை இருவரும் சேர்ந்து,வீர வசனங்கள் பேசிக்கொண்டே ...."கழுத்தை நெரித்து கொன்று விடுகின்றனர்."
எப்படி......படிக்கிறப்பவே ..தலை சுத்துதா?இது மாதிரி எத்தனையோ,..இன்னும் நடக்குதுங்க....பேருந்துல எறங்கி வேலைக்கு நடந்து போய் கிட்டு இருக்கறப்பவே செய்தி காதுல வந்து விழும்,"என்னா வாத்தியாரே,நான் தான் சொன்னேன்ல....நேத்து பொழுசாயமே...மாயன் மக...சின்னவ லெட்சுமிய கட்டி த்தூக்கிட்டாணுக ப்பா"..அப்படீனா...அடிச்சுகொன்னு,தற்கொலை செய்து கொண்டது போல கயிற்றில் கட்டிவிடுவது.

கடந்த சனிக்கிழமை 28-ந் தேதி,மதுரையில் உள்ள Bell ஹோட்டலுக்கு உறவினர்களோடு இரவு சாப்பிட வந்தேன்,ஒரே நேரத்தில் 1000-பேர் கூட அமர்ந்து சாப்பிட முடியும்,
வசதியான,அனைத்துவகை உணவுகளும் கிடைக்கும் உணவகம்,நான்கு டேபிள் தாண்டி இயக்குனர் சேரன் அவரது உறவினர்களோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்,அவரைப்பார்த்தவுடன் எங்கள் டேபிளில் சினிமா பற்றிய பேச்சு வந்து ,சாப்பிட்டு முடித்து அப்பிடியே,இரவுக்காட்சி சினிமா போக முடிவுசெய்து,அருகில் உள்ள மாணிக்க வினாயகரில் "நான் மகான் அல்ல "சென்றோம்,படம் எனக்கு பிடித்து இருந்தது,இன்றைய இளைஞர்களின் தறிகெட்ட நிலையை ஆவணப்படுத்தியிருக்கிறார்,அந்த இளைஞர்களை ப்போல எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள்,சென்னைக்கு,ஒரு மெரினாவும் .....கிழக்கு கடற்க்கரை சாலை போல,மதுரையிலும்,அழகர்கோவில் இருக்கிறது,சபலத்தோடு,தனியாக ஒதுங்கும் காதலர்களை குறிவைத்து,கற்பழிக்கும் கொடுரக்கும்பல் இன்னமுமிருக்கிறது,
ஆனாலும் சென்னை ECR-ல் அடர்ந்து நிற்கும் சவுக்கு த்தோப்புகளில்....எத்தனையோ இளம்பெண்கள்,இந்த மாதிரி "சைக்கோகளிடம்" சிக்கி சீரழிகின்றனர்.

காதலர்கள் மீதான வன்முறைகளும்,பாலியல் சுரண்டல்களும் சென்னை ECR- ல் அதிகம்,,,,பொதுவாக இந்த மாதிரி இரண்டு கால் மிருகங்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது,நம்முடன் பயணிக்கும் சக பயணியாக இருக்கலாம்,உங்கள் வீட்டுக்கு எதிர் வீடாகவோ,பக்கத்து வீடாகவோ,இருக்கலாம்,அவ்வளவு ஏன்..?உங்க காசிலேயே பாரில் தண்ணியடித்து ....உள்ளூர் இலக்கியம் முதல் ,உலக இலக்கியம் வரை பேசும் உங்கள் நண்பனாகக்கூட இருக்கலாம்,....உங்கள் வீட்டில் உங்களோடு கூட வசிப்பவராக க்கூட இருக்கலாம்,இன்னைக்கு தேதியில மூணாறில் Hottest Tourist Spot-எது தெரியுமா? சென்னையில் இருந்து தன் கணவனை இன்ப சுற்றுலா கூட்டி வந்து,இங்கே மூணாறில் தனது கள்ளக்காதலனோடு கொன்று போட்ட இடம் தான், இப்படி இந்த மிருகங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியாது,தானாக வந்து மாட்டும் வரை, அது வரை கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.Wednesday, August 25, 2010

"உமா சங்கர்."

வணக்கம் நண்பர்களே,தருமி ஐயா ...உமா சங்கருக்காக ஆதரவு இடுகைகள் வேண்டி,விடுத்த அறிவிப்பை அடுத்து,எழுத வேண்டுமே என யோசித்துக்கொண்டிருக்கையில் ,இன்றைய தினம்,தினமணியில் "மதுரை பெற்றெடுத்த சிங்கம்,மாவீரன் பழ.நெடுமாறன் எழுதிய கட்டுரையை படிக்க நேர்ந்தது,படித்தேன்.....அதிர்ந்தேன்...பகிர்ந்தேன்.....தயவுசெய்து படித்துப்பாருங்கள்.
****************************************************************************************************************
இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி லண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இந்திய வைசிராயின் நிர்வாகக்குழு, மாநில ஆளுநர்களின் நிர்வாகக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இவர்களின் கீழ் உள்ள வேலைகளுக்குத் தேவையானவர்களை இங்கிலாந்திலிருந்து கொண்டுவர முடியாது. எனவே அதற்கேற்றவர்களை இந்தியாவில் உருவாக்குவதற்காகத்தான் மெக்காலே கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதலாம் உலகப் போர் வரை இந்தியர்கள் யாரும் ஐ.சி.எஸ். படிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. அதற்குப் பிறகே இந்தியர்கள் இப்பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், மிக உயர்ந்த அதிகாரப் பொறுப்பில் ஆங்கிலேயர்கள் மட்டுமே நீடித்தார்கள். இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற்கும், அரசுக்கெதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கும் இவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனாலும் இந்தியா முழுவதிலும் முழுமையான நிர்வாக இயந்திரம் டெல்லி முதல் குக்கிராமம் வரை பிசிரின்றி இயங்கியது. வெள்ளையர்கள் வெளியேறும் போது இந்த நிர்வாக இயந்திரம் சீராக இயங்கியதால்தான் இளம் சுதந்திர அரசு சிக்கலின்றி செயல்பட முடிந்தது.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாட்டின் பல பகுதிகளில் மூண்டெழுந்த மதக் கலவரங்கள், 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சி, ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் திறன் போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த நிர்வாக இயந்திரத்தின் துணைக்கொண்டு சுதந்திர இந்திய அரசும், மாநில அரசுகளும் வெற்றிகரமாக சமாளித்தன.

மத்திய உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் இருந்த காலத்தில் ஐ.சி.எஸ்.க்குப் பதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்கி சுதந்திர இந்தியாவில் புதிய சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்தே ஆங்கிலேய அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றவற்றில் தேர்ச்சி பெற்று அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர்.

அதே வேளையில் மத்திய அரசிலும், மாநில அரசிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றார்கள். இந்த புதிய சூழ்நிலையில் அதிகார வர்க்கத்கும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே உள்ள உறவு குறித்து சிக்கல் ஏற்படாத வகையில் செயல்படவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. பிரதமராக இருந்த நேரு அவர்களும், தமிழக முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையீடு செய்வதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை. சில வேளைகளில் கட்சியினர் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தபோது உடனடியாகத் தலையிட்டு அவர்களைத் தண்டிக்கத் தவறியதில்லை.

மக்கள் பிரச்சனைக்களுக்காக அதிகாரிகளை அணுகுவதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதும், நியாயமற்றதுமான பரிந்துரைகளுக்காக அதிகாரிகளை அணுகுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

எடுத்துக்காட்டாக சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் குறித்து உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும் கொஞ்சமும் தயங்காது அவர்களைக் கைது செய்தார். முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும் அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.

இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆனால், இன்று நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். அறிவாற்றலும் திறமையும் நிறைந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், தேர்வுகளில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக வடிகட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகளாக வருகிறார்கள். ஆனால் அவர்களை அரசியல் மலைப் பாம்புகள் சுற்றி வளைத்து மிரட்டுகின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நிர்வாகம் முழுமையாகக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - தங்கள் விரும்பியபடியெல்லாம் அரசு அலுவலர்களை ஆட்டிப் படைக்கின்றனர்.

முதலமைச்சரின் குடும்பத்திலிருந்தும், அமைச்சர்களின் குடும்பங்களிலிருந்தும் பல அதிகார மையங்கள் அதிகாரிகளை ஆட்டிப் படைக்கின்றன. இதன் விளைவாக அரசு நிர்வாக இயந்திரம் சீரழிந்து போய்க் கிடக்கிறது. இதன் காரணமாக பல அதிகாரிகள் அமைச்சர்களின் விசுவாசிகளாக கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறியதன் விளைவாக நிர்வாக இயந்திரம் பிளவுபட்டுக் கிடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு, வேலை மாறுதல் போன்றவை முறைப்படி நடைபெறுவதில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நடைபெறுவதால் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்த்து நிற்க முடியாமல் பணிந்து விடுகிறார்கள். ஊழலுக்குத் துணைபோகிறார்கள். நாளடைவில் அவர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அதிகாரிகள், முதுகெலும்பில்லாமல் வளைந்து கொடுக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.

ஊழலுக்குத் துணை நிற்காத அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக உமாசங்கர், ஐ.ஏ.எஸ். திகழ்கிறார். மதுரை மாவட்டத்தில் 1991-1996 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராமங்களில் சுடுகாட்டுக் கூரைகள் அமைக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடைபெற்று இருப்பதை அப்போதைய துணைக் கலெக்டரான உமாசங்கர் கண்டுபிடித்தார். இந்த ஊழலில் அப்போது அமைச்சர்களாக இருந்த செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ஆச்சாரியலு மற்றும் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இந்த ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கரைப் பாராட்டிப் பரிசு வழங்க வேண்டிய தி.மு.க. அரசு அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தாற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் தி.மு.க. அரசின் பல துறைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை இவர் கண்டுபிடித்ததால் அடிக்கடி வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்க முயன்றது. எந்தத் துறைக்கு மாற்றினாலும் அத்துறையில் ஊழல்களை அம்பலப்படுத்தும் பணியினை இவர் தொடர்ந்தார். எனவே வேறு வழியில்லாமல் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்க அரசு முற்பட்டுள்ளது.

சுடுகாட்டுக்கூரை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செல்வகணபதி இப்போது தி.மு.க.வில் தஞ்சம் புகுந்து தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான உமாசங்கர் மீதே ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டால் அவரது சாட்சியம் நம்பத்தகாதது ஆகிவிடும் என்பதற்காக இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கக்கூடும்.

மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான ஊழல் குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப்படுகிறார் என வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி தனது அரசின் ஊழலை மறைக்க தலித் அதிகாரியான உமாசங்கரை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?

சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், மிகக் கொடுமையான முறையில் தாக்கிய காவலர்களை ஏவிய சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரைப் பதவி இடைநீக்கம் செய்யவேண்டுனெ உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதித்துள்ள முதலமைச்சர், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படாத நிலையில் உமாசங்கரை மட்டும் இடைநீக்கம் செய்தது ஏன்?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா? கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா?

தன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த "தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...?


Tuesday, August 24, 2010

"காவ்யா ஜெயராம்."

ஹைதராபாதில் நடைபெறும் சர்வதேச கணிதவியலாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாதில் கடந்த 19-ல் துவங்கிய இந்த மாநாடு வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட கணித அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்கு மத்தியில் விளையாட்டாக சுற்றித் திரியும் 12 வயதுச் சிறுமி காவ்யா ஜெயராம், சில நாள்களுக்கு முன்பு "இன்டெகர் பார்ட்டிஷனிங்".

குறித்து தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தபோது கணிதவியல் ஜாம்பவான்கள் எல்லாரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர். இந்த சிறுமிக்குள் இவ்வளவு கணித ஞானமா என்று வாய்விட்டு கேட்டவர்கள் பலர்.

ஆனால், இதெல்லாம் சாதாரணம், காவ்யாவின் ஆய்வு முடிவுகள், சர்வதேச எண் கணித இதழில் ஏராளம் வெளிவந்துள்ளன என்று அவரது தாயார் சுபத்ரா பெருமிதம் பொங்க கூறுகிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பே பகுதியில் வசிக்கும் காவ்யாவின் குடும்பத்தினர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் சிறுமியின் அறிவுப் பசிக்கு ஆசிரியர்களால் தீனி போட முடியவில்லை.

ஐந்து வயதில் அவர் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டார். 7 வயதில் உயர் கல்வியை முடித்து விட்டார். இப்போது கல்லூரியில் படித்து வரும் காவ்யா, சிறு வயது முதல் கணக்கையே முழுநேர உணவாக உண்டு வாழ்கிறாள்.

"வீட்டில் அவருக்கு யாரும் எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை. பள்ளி முடிந்து வந்ததும் அவராகவே கணக்குப் புத்தகங்களை எடுத்துப் படிக்கத் துவங்கி விடுவார். இயல்பாகவே அவர் ஒரு குழந்தை மேதாவி. அவரைப் போல உள்ள குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது குறித்து இணையதள பிளாக்கில் நான் அறிவுரை கூறி வருகிறேன்' என்கிறார் அவரது தாயார் சுபத்ரா.

தாய்மொழியான தமிழில் காவ்யாவுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும். ஆனால், சரளமாகப் பேச வராது என்று கவலைப்படுகிறார் சுபத்ரா.

மலைமலையாக குவியும் பாராட்டுகளைக் கண்டுகொள்ளாமல் மான்குட்டியாகத் துள்ளித் திரியும் காவ்யா, மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்துகிறார்.

"குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை கணக்கு என்றால் ஏன் கசக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. கணக்கைப் போன்ற இனிமையான பாடம் வேறு எதுவும் இல்லை' என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் அச் சிறுமி.

சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் படிக்க விரும்புவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவில் உள்ள பெர்க்கிலே அல்லது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கணிதம் மட்டுமன்றி இசையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறாள் காவ்யா. மேற்கத்திய இசையோடு, இந்திய இசையை ஒப்பிட்டு ஆய்வு நடத்தி வரும் அவர், "கலிபோர்னியா யூத் சிம்பொனி' இசைக் குழுவில் பிரதான வயலின் இசைக் கலைஞராகவும் ஜொலிக்கிறார்.
உலகின் அறிவார்ந்த சமூகம் நம் தமிழ் சமூகம் என்பது, உலகரங்கில் தொடர்ந்து நிருபிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியைத்தருகிறது,உங்களோடு சேர்ந்து இந்த குட்டிச்செல்லத்தை வாழ்த்துகிறேன்.


Wednesday, August 18, 2010

கார்மென் பிராம்ளி.

Carmen Bramly

இன்றைய தேதியில் பிரான்ஸ் நாட்டில் ஹாட்டஸ்ட் டாபிக் இந்த பதினைந்து வயது பள்ளிச்சிறுமி தான்,கவிதைகளையும்,சிறு கதைகளையும் எழுதி கொண்டிருந்த கார்மென் சத்தமில்லாமல் கடந்த ஒரு வருடமாக எழுதி முடித்த முதல் நாவலை [Pastel Fauve] பிரான்சின் புகழ் பெற்ற புத்தக நிறுவனம் அடுத்த வாரம் வெளியிட இருக்கிறது.

அப்படி என்ன அதில் ஸ்பெசல் என்றால்,கார்மெனின் கதை நாயகி "பலோமா" தனது பதினான்காவது வயதில் தனது கன்னித்தன்மையை அவளது காதலன் "டோஹர்டிக்கு "காதல் பரிசாக கொடுத்ததை பற்றியும்,இன்னபிற கிளுகிளுப்பான விசயங்களையும் அப்பட்டமாக எழுதியிருப்பதால் இலக்கிய உலகின் இள வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வரிசையில் கார்மெனும் இடம் பெற்று விட்டார்,பிரான்ஸ் நாட்டின் கலை இலக்கிய வளமும்,பண்பாடும் உண்மையிலேயே உலகிற்கு ஒரு கொடை தான்,இந்நேரம் நம் நாடாக இருந்திருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருக்கும் என நினைத்துப்பார்த்தேன் ...

இங்கே பெண்களால் ஒளிவு மறைவின்றி,மனசுக்கு பட்டதை எழுதி விடமுடியுமா? காதலர் தினத்தைகூட பயந்து ..பயந்து தானே கொண்டாட வேண்டியிருக்கிறது,கலாச்சார தாலிபான்களால் நாம் காவல் காக்கப்படுகிறோம் என்பது தான் உண்மை,நான் இங்கே குறிப்பிடுவது ஒழுக்கம் சார்ந்த விடயமல்ல,"சுதந்திரமான ,பரந்துபட்ட,கலை இலக்கிய வெளியை."
Monday, August 16, 2010

லேண்டு மாபியாஸ்.

வயல் வரப்புகளுக்காக வெட்டி மடிந்த சகோதரர்கள் பற்றிய கதைகள் இந்த மண்ணுக்குப் புதியதல்ல. ஆனால் அத்தகைய கொலைகள் வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் மேலீட்டால் நடந்தவையாகத்தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில், சகோதரர்களைத் தூண்டிவிட்டு, கூலிப் படைகள் கொலை செய்யும் அளவுக்கு வரம்புகள் எல்லை மீறிச் சென்றுள்ளன.

இரு தினங்களுக்கு முன்பு, சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடைசி வாரிசான சிவகுரு என்கிற சிறுநீரக நோயாளி, தானே இந்தக் கொலைகளைச் செய்துள்ளதாகச் சென்னையில் சரணடைந்தபோதிலும், இந்தக் கொலையைச் செய்தவர்கள் நிலம் பறிக்கும் கும்பல்தான் என்பதைக் காவல்துறை உள்பட அனைவரும் உறுதியாக நம்புகின்றனர். இதன் பின்புலத்தில் சில அரசியல்வாதிகள் இருப்பதாகவும் வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. போலியாக பவர் ஆப் அட்டார்னி தயாரித்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று ஏற்கெனவே காவல்நிலையத்தில் புகார் செய்தும்கூட, நடவடிக்கை இல்லை என்பதால்தான் இந்தக் கொலைகள் நடந்துள்ளன.

இந்தக் கொலைகள் நடந்த பண்ணை வீட்டுக்கு வந்த மோப்ப நாய், அங்கே தூவப்பட்டிருந்த மிளகாய்ப் பொடி காரணமாக, வீட்டுக்கு உள்ளேயும் நுழையாமல் திரும்பியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான தந்தை முன்னாள் காவல் ஆய்வாளர். ஒரு சகோதரருக்குக் கராத்தே தெரியும். ஆகவே இது கூலிப்படையின் செயல் என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.

சென்ற ஆண்டு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதும், கொலையாளியைப் பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பின்னர் அவர் இறந்து போனார் என்பதும் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தக் கொலையும், கொலையான நபருக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலத்தை விற்க மறுத்ததால் நிகழ்த்தப்பட்ட கொலை என்றும், இதில் இரு முக்கிய அரசியல்வாதிகளின் சகோதரர் மற்றும் மகன் சம்பந்தப்பட்ட நிலபேரம் காரணம் என்றும் பேசப்பட்டது. கொலையாளி காவல் நிலையத்தில் எப்படி இறந்தார் என்பதை விசாரிக்க குழு அமைத்தார்கள். என்ன ஆயிற்று? மக்கள் மறந்தே போனார்கள்.

இன்று தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்ற பெயரில் மிகப்பெரும் மோசடிகள் அரசியல்வாதிகளின் ஆசியுடன், கடைக்கண் பார்வையுடன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. முக்கியமான ஓர் இடத்தில் காலி மனை அல்லது பழைய வீடு இருக்குமானால், இந்தக் கூட்டம் உள்ளே நுழைந்து, விற்றுவிடுங்கள் என்று ஆலோசனை சொல்கிறது. மறுத்தால் கொலை மிரட்டல் விடுக்கிறது. விற்கச் சம்மதித்தால், விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள். பவர் ஆப் அட்டார்னி பத்திரம் செய்து அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். இரண்டு மடங்கு விலைக்கு விற்றுவிட்டு, பேசிய தொகையில் பாதியை உரிமையாளர்களிடம் கொடுத்துவிட்டு, மிச்சத் தொகையை இந்தக் கூட்டம் அப்படியே பங்குபோட்டுக் கொள்கிறது. இதுதான் இன்று தமிழகத்தில் நடைபெறும் நிலம் பறிக்கும் கும்பலின் கொள்ளையடிக்கும் தந்திரம்.

இவர்களை மீறி ஒரு பத்திரம் எழுதப்பட்டால்கூட இந்தக் கூட்டத்துக்கு முதல் தகவல் போய்ச் சேரும் வகையில் அரசியல் செல்வாக்கு இவர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலம் பறிப்புக் கூட்டத்தில் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் முக்கிய நபராக இருந்தாலும், ஒவ்வொரு பகுதியைப் பொறுத்து, ஆங்காங்கே பலமாக இருக்கும் மாற்றுக் கட்சிப் பிரமுகரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் சட்டை செய்வதில்லை.

இந்த நிலம் பறிக்கும் கூட்டத்திடம் ஒரு சர்வே இருக்கிறது. ஊருக்குள் எந்தெந்த வீட்டில் நுழைந்தால் கேட்க நாதியில்லை, யாருக்கு எந்தப் பின்புலம் இருக்கிறது, எந்த வீட்டில் இருக்கும் பெற்றோர் தனியாக இருக்கிறார்கள், யார் இந்தச் சொத்தை வாங்கிப் போட்டுவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள் என எல்லா புள்ளிவிவரமும் இருக்கிறது. அதன் பிறகே இவர்கள் தங்களுடைய நிலம் பறிப்பு நடவடிக்கையைத் தொடங்குகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத் தலை-களும் தங்களை அப்பகுதியின் குறுநில மன்னர்களாக நினைத்துக் கொண்டு கோலோச்சுவதுதான் இந்த நிலைமைக்கு எல்லாம் காரணம் என்பதை நாம் சொல்லித் தெரிவிக்க வேண்டியதில்லை. இன்ன மாவட்டம் இன்னாருக்குச் சொந்தம் என்று பட்டா போட்டுக் கொடுக்காத குறை.

காவல்துறையும் அரசியல் கட்சித் தலைமைகளும் இதில் கண்மூடிக் கொண்டு இருக்கலாம். ஆனால் மக்கள், யார் அனுபவத்தில் இருந்த சொத்து யாருக்கு எப்படிக் கைமாறியது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்குச் சாவடியின் வரிசையில் நிற்கும்போது அங்கே இருக்கும் ஒவ்வோர் அரசியல்வாதியையும் பார்த்து எந்த அளவுக்கு வயிற்றெரிச்சல் அடைகிறார்கள் என்பதைப் பொறுத்து வாக்குகளும் இடம் மாறும். கட்சித் தலைமைகள் இதைப் புரிந்துகொண்டு, வால்-கள் ஆடாமல் இருக்க வகை செய்தால் மட்டும்தான் தமிழகத்தில் பல குடும்பங்கள் அச்சமின்றி இருக்கும். மக்களாட்சியில் அச்சத்தை மாற்றவல்ல மாமருந்தாக ஆட்சி மாற்றம் அமைந்த சரித்திரங்கள் பல உண்டு என்பதை இவர்கள் நினைவில் நிறுத்தினால் நலம்!
நன்றி: "தின மணி"