Friday, October 9, 2009

தடுப்பு முகாம் கவிதைகள்.

பாலைவெளியின் சூன்யம் புரளும்

நீளமான இரவுகளில்

கொட்டி நிற்கும் கொடுக்குகளை

பிடுங்கிப்போட யாருமில்லை .

பால்வற்றிய தனங்களில்

வாயலையும் குழந்தைகளுக்கு

கொஞ்சம் கள்ளிபாலேனும்

தாருங்களேன்.

வக்கிர ஊளையிட்டு

சிங்கள ஓநாய்கள் காவலிருக்க

செம்மறி கிடைகளாய்

எம் தமிழ்தேசிய இனம்.

தொப்புள்கொடி சொந்தங்களே

தமிழ்சாதி உறவுகளே .....

மானாட மயிலாடிவிட்டு

எப்போதாவது ....

நேரமும்...ஈரமும் இருந்தால்

எங்களையும் கொஞ்சம் பாருங்களேன்.
===================================================================================

புதைகுழி மறந்த
சதைபிண்டங்களிநூடே
ஊர்ந்து ...நெளியுது
மானுடம்.
===================================================================================

வல்லுறவும்
சீருடைப்பேய்களின்
குரங்கிடைப்பண்டமாய்
பெற்றவள் கிடப்பதை
கண்பொத்தி விலகாமல்
பதைத்துப் பார்க்கிறான்
விதி மெலிந்த சிறுவன்.
===================================================================================

புதை குழி மேவித்திரும்பும்
இரும்புச்சக்கர வாகனமொன்று
கிளறிவிட்ட புழுதியில்
மின்னி....மறையுது
தமிழச்சியின் தங்கத்தாலி.
===================================================================================

21 comments:

பிரியமுடன்...வசந்த் said...

//வாயலையும் குழந்தைகள்//

வரிகளின் வலியையே தாங்க முடியவில்லை

நிஜத்தில் எப்படி தாங்குகிறார்களோ?

நேசமித்ரன் said...

மிக வேதனை நிறைந்த தருணத்தை பதிவு செய்து இருக்கிறது இந்தக் கவிதை
:(
**************************

பிசாசு வென்றிருக்கும்
இந்த சூதாட்டத்தில் அரிந்து கொடுத்தாயிற்று

உயிர் பருகத்தந்த பாகங்களை
காவலிருந்த கருவறைகளை
சுரக்கத் துவங்காத விரைப்பைகளை

தாள இயலாததாய் இருப்பது
துரோகத்தின் துயர் மிகு தீவதைகளை
இறையாண்மையின் பெயரால்
பிள்ளைக்கறி தின்னும் நீதி தேவதைகளை
துப்பாக்கிகள் தாழ்ந்ததும் அகதிகள்
கைதிகளாவதை

ஒரு அபத்தமாக
ஒரு முடிந்த கொடுங்கனவாக
ஒரு பைத்தியக்காரனின் திமிராக
நசியத் துவங்கும் நம்பிக்கைகள்
மாற்ற துவங்குவதை......
**********************

சக கைதியை வன்புணர்ந்து
தீர்க்கும் காமம் எரிய வேண்டும்
உங்கள் புலன்களில்

இகழ்ந்து பெற்ற களிப்பில்
திரள வேண்டும்
பச்சை உதிரம் ருசித்துப் பழகிய விலங்கின்
கூரிய பல் பழுப்பு நிறம்

தேர்ந்த மருத்துவனின்
பிரேதம் திறக்கும் கருவிகள்
பெரிதும் உதவுகின்றன
வதைத்துச் சுகிக்கும் ரகசிய விளையாட்டில்

கருவை கலைக்கும் வேளைகளில்
உங்கள் சீருடை கறைபடாமல் பார்த்துக் கொள்வதும்
ஒரு நீண்ட இறைஞ்சுதலுக்கு
பின் புகைத்தபடி காட்டும் கருணையில்
சடலத்தின் முகம் சிதையாதிருத்தலும் அவசியம்

இப்போது நீங்கள் தயார்

இனி முன்னறிவிக்கபட்ட
உங்கள் முகாம்களுக்குச் செல்லலாம்

ஜெரி ஈசானந்தா. said...

வசந்த் இனி நமது நட்பும் வசந்தமாகட்டும். நன்றி,தொடர்வோம்

ஜெரி ஈசானந்தா. said...

நேசனுக்கு நன்றிகள் பல..

தேவன் மாயம் said...

வக்கிர ஊளையிட்டு

சிங்கள ஓநாய்கள் காவலிருக்க

செம்மறி கிடைகளாய்

எம் தமிழ்தேசிய இனம்.
///

வாழவும், தப்பிக்கவும் வழியின்றித்தவிக்கிறது!

தேவன் மாயம் said...

புதைகுழி மறந்த
சதைபிண்டங்களிநூடே
ஊர்ந்து ...நெளியுது
மானுடம்.///

மனிதம் புதைக்கப்பட்ட நிலங்களில் பிண்டங்களுக்கு இடமேது!

தேவன் மாயம் said...

புதை குழி மேவித்திரும்பும்
இரும்புச்சக்கர வாகனமொன்று
கிளறிவிட்ட புழுதியில்
மின்னி....மறையுது
தமிழச்சியின் தங்கத்தாலி.///

நேரில் பார்த்தால் ஏற்படும் பதைபதிப்பை இது ஏர்படுகிறது!

யாழினி said...

மிக வேதனையான கவிதை! :(

ஹேமா said...

அவலங்களை வரிகளாக்க மட்டுமே முடிகிறது எங்களால்.பிசாசுகளின் விதிகளுக்குள் பொம்மைகளாய் என் சொந்தங்கள்.கூப்பிடு தூரம்தான் என்கிறேன்.கூப்பிடும் தூரத்தில் அவர்கள் இல்லை.

சி. கருணாகரசு said...

புதைகுழி மறந்த
சதைபிண்டங்களிநூடே
ஊர்ந்து ...நெளியுது
மானுடம்.//

மிக‌ க‌ன‌மான‌ வரிக‌ள்.

ஸ்ரீ said...

அருமை....

ஆ.ஞானசேகரன் said...

//வாயலையும் குழந்தைகளுக்கு

கொஞ்சம் கள்ளிபாலேனும்

தாருங்களேன்.//

ம்ம்ம் நல்லாயிருக்கு வலிகளுடன்

கார்த்திகைப் பாண்டியன் said...

வேதனையும், வலியும் நிறைந்த வார்த்தைகள்..:-(((

வானம்பாடிகள் said...

அய்யா. கண்ணீர் துளிர்க்க வைத்த கவிதை.

ஜெரி ஈசானந்தா. said...

யாழினி,
ஹேமா.
தேவன் மாயம்,
ஞானசேகரன்,
ஸ்ரீ,
கார்த்திகை பாண்டியன்,
வானம்பாடிகள்.
கருணாகரசு.
உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் பல.

ஜெரி ஈசானந்தா. said...

Hi jerryeshananda,

Congrats!

Your story titled 'தடுப்பு முகாம் கவிதைகள்.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th October 2009 06:36:02 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/123142

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

சத்ரியன் said...

//தமிழ்சாதி உறவுகளே .....

மானாட மயிலாடிவிட்டு

எப்போதாவது ....

நேரமும்...ஈரமும் இருந்தால்

எங்களையும் கொஞ்சம் பாருங்களேன்.//

ஈசா,

மானாட மயிலாட - நிகழ்வுல லயிச்சுபோயிதானே,
தமிழனின் மானம் மயிரடியில் கிடக்குது.

எப்போது உறைக்கும் எனக்கும்...???

ஜெரி ஈசானந்தா. said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி. தொடர்வோம் நண்பா

முல்லைமண் said...

மானாட மயிலாடிவிட்டு

எப்போதாவது ....

நேரமும்...ஈரமும் இருந்தால்

எங்களையும் கொஞ்சம் பாருங்களேன்.

ஐரோப்பாவிலும் நம்தமிழ் மக்கள் மானோடும் மயிலோடும் காலம் கடத்துகின்றனர் ஜெரி.

உங்கள் உணர்வார்ந்த கவிதைக்கு நன்றிகள்.

சாந்தி

துபாய் ராஜா said...

வலிக்கும் வரிகள். பூனையை கூட புலியாக்கும் சிங்கள நரிகள்.

ஜெரி ஈசானந்தா. said...

நன்றி சாந்தி, துபாய் ராசாவுக்கும் சேர்த்துதான்