Thursday, October 29, 2009

"நிறம் மாறாப் பச்சோந்தி."

துட்டகை முனு தந்த தூமை தோய்த்து,

பொது விகடம் பேசி சிரித்து,

சாதிய வம்பு திரித்து,

தமிழரபி வன்மம் புனைந்து,

வர்க்க முலாம் பூசிய,

பாசிச நாக்கு நீட்டி,

விதி மெலிந்த விட்டில் பூச்சிகளை,

விழுங்கித் தீர்க்கிறது,

நிறம் மாறாப் பச்சோந்தி.


Monday, October 26, 2009

"மச்சினிக் -கா - துஷ்மன்."

1"மச்சினிக் -கா - துஷ்மன்."

2."தீரமூதி."

3."நட்டுவாக்காலி."

4."எசக்கி முத்துவும் நம்ம இஸ்மாயில் பேரனும்."

5."பிரண்டை."

6."தித்துலி-புத்துலி ராவுத்தர்."

7."ஜிந்தாபாத் -கி- ராணி."

8."புண்ணாக்கு."

9."கவட்டை."

10."இடிபாட்டுக்கு பிறந்தவனின் ஒப்பாரிக்கவிதைகள்."

11."உலகத்தொழிலாளர்களின் ஒட்டுமொத்தக் குத்தகைத்தாரர்கள்."

இவையெல்லாம் என்னுடைய "ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக் காலத்தில்
எழுதித் தீர்த்த, சிறுகதைகள்,கவிதைகளின் தலைப்புக்கள்."

மேலும் மேற்கண்ட தலைப்புகளை "அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள
லாஸ் ஏஞ்செலஸ் நகரில் இருக்கும் புனைவு சார் அறிவியல் கழகத்தில் -ஆசிய தமிழ் இலக்கியப் பிரிவில் பதிந்து வைத்து பிரத்தியேக உரிமை,அதாவது பேடன்ட் ரைட்ஸ் வாங்கி உள்ளேன்."

எனவே தயவுசெய்து யாரும் என் அனுமதி பெறாமல் மேற்கண்ட தலைப்புகளை பயன்படுத்த வேண்டாம் என வம்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Friday, October 23, 2009

முல்லைப்பெரியாறு: "கொடுங்கனவின் கானல் நீர்!"

பல ஆண்டு காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப்பிரச்சனை,இப்பொழுது அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது.கேரளா அரசின் ஏமாற்றுத்தனமும், தமிழக அரசின் ஏமாளித்தனமும் சேர்ந்து , "தென் தமிழக மக்களை தீராத தாகத்தில் தவிக்க வைத்திருக்கிறது."

புளுகு மூட்டைகளின் மீது,உட்காந்துகொண்டு சோசியலிசம் பேசும்,மார்க்சிய அச்சுதானந்தன் ,"முல்லைப்பெரியாறு அணை உடைந்தால்,பல லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது", என்பதெல்லாம் , "முப்பத்தியொரு ஆண்டுகளுக்குமுன்னால்,புனையப்பட்ட அரசாங்க ப்பொய்." என்பது நேற்றுக்காலை 'இந்தியன் எக்ஸ்பிரஸ்நாளிதழில் திரு.பாபு ஜெயக்குமார், எழுதியிருந்த கட்டுரையைப் படித்துத் தெரிந்துகொண்டேன்.

[இலங்கை - சந்திரிகாவிடம் கேல் விருது வாங்கியவரும்,சிங்கள -பௌத்த அரச பயங்கரவாதி ராஜ பக்செவின் தத்துப் பிள்ளையும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க்கட்சியின்
காட்பாதருமான,ஹிந்து நாளிதழை,என் வீட்டு கழிவறைக்காகிதமாக க்கூட பயன் படுத்துவதில்லை.மேலும் உறவினர்கள்,நண்பர்கள் ,ஏன் பயணத்தின் சக பயணிகளில் யாராவது 'ஹிந்து நாளிதழ் " படிப்பவராக இருந்தால்,அவர்களிடத்தில் ஹிந்து ராமின்
அதிரூப அம்சங்களை எடுத்துச்சொல்லி,தற்போது அவர்கள் கையில், ஹிந்துவைத் தவிர்த்து,மாற்று நாளிதழைப் பார்ப்பது, "எளிமையான,சிறிய கருத்துப் பிரச்சாரங்கள், பெரிய மாற்றங்களை உண்டுபண்ணும் என்ற என் கருத்துக்கு வலு சேர்த்து நிற்கிறது.]

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் நிமிர்ந்து நிற்கும் இரட்டை மலைகளான, குறவன்
மலை, குறத்தி மலையின் இடைவெளியை அடைத்து 555 -அடி உயரத்திற்கு கட்டப்பட்ட
இடுக்கி அணையானது,1922-லேயே அணை கட்டுவதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு ,
1932-ல் நீர் மின்நிலையம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அப்போதைய திருவாங்கூர் அரசிடம் அனுமதி பெற்று,1969-ல் திட்டத்தை தொடங்கி,1975-ல் 780
மெகாவாட் வரை மின்சாரம் தயாரித்துக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து நின்ற இடுக்கி
நீர் தேக்கத்திற்கு, நினைத்த அளவில் நீர் வரத்து வந்து சேரவில்லை.

மனிதர்களின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பால்,காட்டு வளங்கள் அழிக்கப்பட்டதால்,
பருவம் தப்பி சரியான மழை இல்லை.சுதாரித்துக் கொண்ட கேரள அரசு, இந்த திட்டத்திற்கு குறுக்கே நந்தி மாதிரி நிற்பது 152 [15.5 TMC ft] அடிவரை நீரைத் தேக்கி நிற்கும்
முல்லைபெரியாறு அணை தான்.எனவே முல்லைப் பெரியாறு அணைக்கு ஆப்பு வைத்து
பெரியாருக்கு மேற்கு நோக்கி ஓடும் நீர்வரத்தை அடைத்து,கிழக்கு நோக்கி திருப்ப,
குறுக்கே அணைகட்டி, நீரை இடுக்கி நீர்தேக்கத்திற்கு அனுப்ப சூது செய்து,1978-ல் கேரள
அரசால் கூட்டப்பட்ட,ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட, அப்போதைய
அரசியல் வாதிகளாலும்,அதிகாரிகளாலும், தொழில் நுட்ப வல்லுனர்கள் என்று சொல்லிகொண்டவர்களாலும் ,"ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக
எடுக்கப்பட்ட முடிவு, அல்லது ஒரு சேரப் புனையப்பட்ட பொய் செய்திதான்,
"முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக இருக்கிறது.எந்நேரமும் உடையலாம்,
அவ்வாறு உடைந்தால் பல லட்ச மனித உயிர்கள் பலியாகலாம்." என்பது.


சரி, இந்த பொய் செய்தியை எப்படி பரப்புவது? என்ற கேள்விக்கு,அந்த கூட்டத்திலிருந்த
பொறியாளர் "விசயம் ரொம்ப எளிது." ஒரு பத்திரிக்கை நிருபரை வரவழையுங்கள்.
கூட்டத்தின் முடிவைச்சொல்லுங்கள், மீதி வேலையை அவர் பார்த்துக்கொள்வார். என்று சொல்ல,அதன்படியே அன்றைய பிரபல மலையாள நாளிதழ் நிருபர் வரவழைக்கப்பட்டு,
அடுத்த நாளே, அது தலைப்புச்செய்தியாக,இதையே கருத்துப்பிரட்ச்சாரமாக ஒவ்வொரு
மலையாளியும் செய்யத்துவங்கினார்கள். இடையில் 1979-ல் ரிக்டர் அளவில் 2 புள்ளி
ஏற்பட்ட நிலநடுக்கமும் அவர்களது பொய்க்கு வலு சேர்க்க,இன்று வரை அந்த பொய்
மூட்டையை தூக்கி சுமக்கிறார்கள்.


ஆனால் உண்மை என்னவென்றால்,அப்படியே அணை உடைந்தாலும்,முல்லைப் பெரியாறு அணை நீரானது ," நீர் வழிந்தோடியதால் ஏற்பட்ட மலை இடுக்குகளின் வழி
ஓடி, நேராக இடுக்கி நீர் தேக்கத்தை தான் அடையும்."இடுக்கி அணைக்கு எந்த சேதாரமும்
ஏற்படாது,ஏன் என்றால் முல்லைப் பெரியாறு நீர்தேக்க கொள்ளளவை விட, இடுக்கி அணையானது, நான்கு மடங்கு பெரிய,அதாவது 72.6 TMCft அளவு கொள்ளளவு கொண்டது. இதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து என்பது கட்டுக்கதை,என்ற உண்மையை இதுவரை யாரும் முன்வைக்கவில்லை.

இப்படியே கடந்த முப்பத்தொரு ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் இப்பிரட்சினை இன்று உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. எது எப்படியோ? இங்கே
பருவ மழையும் தப்பிப்போக,வைகை அணையும்,"இந்தா-அந்தா" என்று ஏமாற்ற,
விதை நெல்லை, நாற்றுப்பாவி,தண்ணீர் இல்லாமல், நாற்றும் கருகிப்போய்,
நடவு செய்யமுடியாமல், விழி பிதுங்கி நிற்கும் ஏழை விவசாய சனங்களுக்கு
என்னபதில் சொல்லப்போகிறது.? "இத்தாலிய இறக்குமதியான சோனியாவின்
இந்திய இறையாண்மை."

Thursday, October 15, 2009

"ஏர் டெல்-போனில் டிவிட்டர் சேவை.".


நாளுக்கு நாள்,ட்விட்டிக்கொண்டு இருப்பவர்கள் அதிகமாவதால்,தனது வாடிக்கையாளர்களுக்கு மேலதிக சேவையாக,இந்தியாவில் நூறு மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர் -டெல் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ள ட்விட்டர்
நிறுவனம் இன்றுமுதல் மொபைல் போனில் -எஸ் எம் எஸ் செய்வதன் மூலம் ட்விட்டிக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது.

சேவையை தொடங்க ட்விட்டர் கணக்கில் டிவைசெஸ் கிளிக் செய்து உங்களது மொபைல் என்னை கொடுக்கவும். மேலும் விபரங்களுக்கு ஹெல்ப் பகுதியை படிக்கவும்.

Friday, October 9, 2009

"பார் கோடில் உங்கள் பெயர்".பார் கோடில் உங்களது பெயரையோ,அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரையோ,இப்படி எதை வேண்டுமானாலும் பார்கோடில் பார்க்க ஆசை இருக்கிறதா,நண்பர்களே.?
ரொம்ப சுலபம். கீழே உள்ள இணைய தளத்தில் சென்று உங்களுக்கு வேண்டிய பெயரை க்கொடுத்து அழகு பாருங்கள்.

http://www.morovia.com/free-online-barcode-generator/

தடுப்பு முகாம் கவிதைகள்.

பாலைவெளியின் சூன்யம் புரளும்

நீளமான இரவுகளில்

கொட்டி நிற்கும் கொடுக்குகளை

பிடுங்கிப்போட யாருமில்லை .

பால்வற்றிய தனங்களில்

வாயலையும் குழந்தைகளுக்கு

கொஞ்சம் கள்ளிபாலேனும்

தாருங்களேன்.

வக்கிர ஊளையிட்டு

சிங்கள ஓநாய்கள் காவலிருக்க

செம்மறி கிடைகளாய்

எம் தமிழ்தேசிய இனம்.

தொப்புள்கொடி சொந்தங்களே

தமிழ்சாதி உறவுகளே .....

மானாட மயிலாடிவிட்டு

எப்போதாவது ....

நேரமும்...ஈரமும் இருந்தால்

எங்களையும் கொஞ்சம் பாருங்களேன்.
===================================================================================

புதைகுழி மறந்த
சதைபிண்டங்களிநூடே
ஊர்ந்து ...நெளியுது
மானுடம்.
===================================================================================

வல்லுறவும்
சீருடைப்பேய்களின்
குரங்கிடைப்பண்டமாய்
பெற்றவள் கிடப்பதை
கண்பொத்தி விலகாமல்
பதைத்துப் பார்க்கிறான்
விதி மெலிந்த சிறுவன்.
===================================================================================

புதை குழி மேவித்திரும்பும்
இரும்புச்சக்கர வாகனமொன்று
கிளறிவிட்ட புழுதியில்
மின்னி....மறையுது
தமிழச்சியின் தங்கத்தாலி.
===================================================================================

Saturday, October 3, 2009

அறுந்தும் விழாத வால்.

வாலறுந்து வந்தவன் மனிதன் என்கிறார்கள் ,
ஆனால்......
வாலுடன் வாழும் மனிதர்களாகவே
இன்னும் இருக்கிறோம்.


ஒவ்வொருவருக்கும்
இது..முளைத்தே பிறக்கும்.
நாம் இறந்தாலும் இருக்கும்.
இப்படி அதிசயமான இந்த வால்,
மந்திர வாதிகளால் கணவாய் கடந்து வந்த
தெய்வ உறுப்பு என்று சொல்லிக்கொள்கிறார்கள்.


இது அழகானது .. அது அசிங்கமானது
இது குட்டையானது ,அது நெட்டையானது,
இது மொட்டையானது,அது கூரானது,
என்று அடுத்தவர் வாலைப்பற்றி, வாயாடுகிறார்கள்.


இந்த வாலை வைத்துக்கொண்டு ,
சிலர் சிலிப்பிக்கிட்டே த்திரியவும்,
சிலர் சுருட்டியே வைத்திருக்கவும்
பழக்கப்படுத்திக்கொன்டார்கள்.


அவ்வப்போது....
அவரவர் எல்லைக்குள் ..
மயிலாட்டம், குயிலாட்டம்,
கரகாட்டம்,ஒயிலாட்டம் போல,
வாலாட்டம் ஆட..
வழக்கப்படுத்திக்கொண்டார்கள்.


அவ்வப்போது அவரவர் வாலை,
நீட்டிக்காட்டவும்,
ஒளித்துச்சுருட்டவும்
ஆசைப்படுகிறார்கள்.


சிலருக்கு ...இந்த வால்
"அவஸ்தையின் ரீங்காரம்,"
இன்னும் சிலருக்கு ..
"அவசிய அங்கீகாரம்".


பலருக்கு இந்த வால்..
நமட்டிச்சிரிக்கவும்,
நக்கி பிழைக்கவும்,
நடுங்கி ஒடுங்கவும்,
மிடுக்கி ஒடுக்கவும்,
வசதியாய் போனது.


என்ன செய்து தொலைக்க..
ஊரைப்போல, நாட்டைப்போல,
நானும்தான் சுமக்கிறேன்,
அறுந்தும் விழாத என் வாலை.