Monday, July 13, 2009

"இயேசு கிறிஸ்துவும் பிரபாகரனும் "

மக்களையும்
மண்ணையும் மீட்க
அன்பையே ஆயுதமாகவும்
ஆயுதத்தையே அன்பாகவும் ஏந்தி
பன்னிருவரிலும்
பன்னிருமடங்கிலும்
விடுதலை வீரர்களை
சீடர்களாக்கிநீர்கள்
மக்களை மன்னித்தவன்
மத விரோதியாம்
மண்ணை நேசித்தவன்
தீவிர வாதியாம்
இது....
ஆட்சியாளர்களின்
கொலைக்கள தீர்ப்பு
கேத்செமனியிலும்
முள்ளி வாய்க்காலிலும்
காட்டிக் கொடுக்கப்பட்டு
சிலுவை பாடுகளையும்
சித்தர வதைகளையும்
தோள் மாற்றி சுமந்தீர்கள்
கல்வாரியின் கதறல்
நந்திக்கடலில் எதிரொலித்தது
பேயின் ஆட்சியாளர்களுக்கு
புரிவதில்லை ...
உடல்
வெட்ட..வெட்ட..
முளைக்குமென்று .
மீட்பின் பயணத்தை
முப்பத்தி மூன்று ஆண்டுகளில்
முடித்துக்கொண்டாலும்
உயிர்த்து நிற்கிறீர்கள்
உங்களின் கனவுகளை
எங்களுள் விதைத்து

Friday, July 10, 2009

இவர்களை எனக்கு பிடிக்கவில்லை.

ஐந்து நிமிட பழக்கத்தில்
அடுத்தக்கேள்வியாய்
நீங்கள் தேவரா? பிள்ளையா?
என்பவனை.

தீபாவளி இனாம் கேட்டு
வீட்டிற்கே வரும்
மத்திய,மாநில,பொதுத்துறை
தர்மக்காரர்களை.

ஓட்டுப்போட
பூத் சிலிப்புடன்
கவரையும் நீட்டும்
கரை வேட்டிக்காரர்களை .


Thursday, July 9, 2009

முகாமிலிருந்து ஒரு முராரி.

நந்திக்கடலோரத்தில....
நான் தொலைச்ச முத்துக்கள
கண்டெடுத்தா சொல்லுங்களேன்...
மீட்டெடுப்போம் வாருங்களேன்.
ஆண்டு பல காலமா ஏத்திவச்ச பெருநெருப்பு
மண்ணுக்குள்ள போனதடி நெஞ்சுக்குழி வேகுதடி,
மண்ணுக்குள்ள போனாலும் விருட்சமாக வளருமடி
தலவிருட்சமாகி காக்குமடி.


Wednesday, July 8, 2009

புத்தர் தப்பியோட்டம்.

யுத்தம் சரணம் கச்சாமி
மர்மம் சரணம் கச்சாமி
பங்கம் சரணம் கச்சாமி.

Tuesday, July 7, 2009

தடுப்பு முகாம் கவிதைகள்- காட்சி ஐந்து.

புதை குழி மேவித்திரும்பும்
இரும்புச்சக்கர வாகனமொன்று
கிளறிவிட்ட புழுதியில்
மின்னி....மறையுது
தமிழச்சியின் தங்கத்தாலி.

Monday, July 6, 2009

தடுப்பு முகாம் கவிதைகள்; காட்சி மூன்று.

புதைகுழி மறந்த
சதைபிண்டங்களிநூடே
ஊர்ந்து ...நெளியுது
மானுடம்.
காட்சி நான்கு.
வல்லுறவும்
சீருடைப்பேய்களின்
குரங்கிடைப்பண்டமாய்
பெற்றவள் கிடப்பதை
கண்பொத்தி விலகாமல்
பதைத்துப் பார்க்கிறான்
விதி மெலிந்த சிறுவன்.

Thursday, July 2, 2009

பெயர் தொலைத்த கதை.

ஆதி காலந்தொட்டே
எங்களின் பெயர்
பூனைகள்.

இல்லவே இல்லை
நீங்கள்......
புலிகள்.

சரி நாங்கள் புலிகள்.

கண்கள் சிவக்க
கர்ஜித்த சிங்கம்
கறாராய் கூப்பிட்டது
கானகத்து
கட்டப் பஞ்சா யத்தர்களை .

கழுகும் மயிலும் வந்தது,
கணக்காய் தீர்ப்பும் சொன்னது.

புலியும் வேண்டாம்,
பூனையும் வேண்டாம்.
பிடித்துப்போடு இவர்களை
'' இனி நீங்கள்
சொந்த நாட்டின் அகதிகள்."

Wednesday, July 1, 2009

தடுப்பு முகாம் கவிதைகள்.பாலைவெளியின் சூன்யம் புரளும்

நீளமான இரவுகளில்

கொட்டி நிற்கும் கொடுக்குகளை

பிடுங்கிப்போட யாருமில்லை .

பால்வற்றிய தனங்களில்

வாயலையும் குழந்தைகளுக்கு

கொஞ்சம் கள்ளிபாலேனும்

தாருங்களேன்.

வக்கிர ஊளையிட்டு

சிங்கள ஓநாய்கள் காவலிருக்க

செம்மறி கிடைகளாய்

எம் தமிழ்தேசிய இனம்.

தொப்புள்கொடி சொந்தங்களே

தமிழ்சாதி உறவுகளே .....

மானாட மயிலாடிவிட்டு

எப்போதாவது ....

நேரமும்...ஈரமும் இருந்தால்

எங்களையும் கொஞ்சம் பாருங்களேன்.

ஜெரி ஈசானந்தா.

மதுரை.